பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
நிலவும் சீரற்ற வானிலையால் கிளிநொச்சி மாவட்டத்தில் 220 குடும்பங்களைச் சேர்ந்த 633 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அந்த பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாரதிபுரம் கிராம சேவையாளர் பிரிவில் 105 குடும்பங்களைச் சேர்ந்த 345 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 65 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடரும் சீரற்ற வானிலை தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இடர் ஏற்படும் சந்தர்ப்பத்தில் கிராம சேவையாளர் ஊடாக அனர்த்த முகாமைத்துவப்பிரிவு, காவல்துறையினர், இராணுவத்தினர் ஆகியோரின் உதவியைப் பெறுமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை, மன்னார் மாவட்டத்திலிருந்து மீனவர்களை மறு அறிவித்தல் வரை கடற் தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட அரசாங்க அதிபர்.க.கனகேஸ்வரன் கோரியுள்ளார்.
குறைந்த தாழமுக்கத்திற்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது தொடர்பில் அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் குறைந்த தாழமுக்கம் காரணமாக ஏற்படவுள்ள அனர்த்தத்தைத் தடுக்க முப்படையினர், காவல்துறையினர் மற்றும் திணைக்கள அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.