பெண்கள் மீது சமுதாயத்திற்கு முப்பெரும் கடமைகள் உள்ளன: வெருகல் பிரதேச செயலாளர் அனஸ்

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்-

மனித சமுதாயத்திற்கு பெண்கள் மீது முப்பெரும் கடமைகள் உள்ளன. அவற்றை சரிவர நிறைவேற்றினாலே மனித சமூகம் உருப்பட வழி பிறந்து விட்டது என்றாகிவிடும் என வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ. அனஸ் தெரிவித்தார்.

“நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக – வலுவான பெண் வழித்தடமாக இருப்பாள்” எனும் இவ்வருட சர்வதேச மகளிர் தின தொனிப்பொருளில் அமைந்த இந்த நிகழ்வில் பல்வேறு சவால்களை எதிர் கொண்டு கல்வி, பொருளாதாரம், தொழில் முனைவு உள்ளிட்ட பல்வேறு வாழ்வியல் அம்சங்களில் முன்னிலை வகிக்கும் பெண்கள் கௌரவித்துப் பாராட்டப்பட்டார்கள்.

இளைஞர் அபிவிருத்தி அகம், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையுடன் பிரதேச மகளிர் அபிவிருத்தி அலுவலர் என் சிபாதா பானு தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரதேச செயலாளர் அனஸ், பெண்களை மதிப்போம் பெண்களை வளர வழி வகுப்போம் பெண்களைப் பாதுகாப்போம் ஆகிய முப்பெருங்கடமைகளை பெண்களுக்காகச் செய்ய வேண்டிய பொறுப்பு மனித சமுதாயத்திற்கு உண்டு.

பெண்கள் என்றால் யார் என்று உற்று நோக்குகின்றபோது அவள் ஒரு தாயாக சகோதரியாக, துணைவியாக, மகளாக பல்வேறு பாத்திரங்களிலே ஆணைச் சுற்றி வலம் வருபவள்தான் பெண். ஆகவே, பல்வேறு பாத்திரங்களை வகிக்கும் இந்தப் பெண்கள் மதிக்கப்படாதவிடத்து அந்த சமூகம் பின்தங்கிய சமூகமாகவே இருந்து கொண்டிருக்கும்.

மனித குலம் ஆளுமை மிக்க, சிறந்த, வளர்ச்சியடைந்த ஒரு சமூகமாக மாறுவதற்கு நாங்கள் முதலில் பெண்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

தாயின் பாதத்தின் கீழ் சொர்க்கம் உள்ளது என்று இஸ்லாமிய மார்க்கம் இயம்புகின்றது. அவ்வாறானதொரு மதிப்பு மிக்கவள் தாய். இப்பொழுது பாருங்கள் வீதியோரங்களிலே எத்தனையோ தாய்மார் யாசகம் கேட்டுக் கையேந்தி நிற்கிறார்கள்.

இப்பொழுது நிருவாகத்துறை, சட்டத்துறை, பாதுகாப்புத்துறை, மருத்துவத்துறை, அரசியல்துறை, என்று பல்வேறு சமுதாயப் பணிகளிலே அவர்கள் பொறுப்பேற்றுக் கடமை புரிகின்றார்கள். அவர்களை நாம் கௌரவிக்கின்றோம்.

பல்வேறு சாதனைப் பெண்களை நாம் காண்கின்றோம். என்றாலும் இன்னமும் சமுதாயத்தில் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். இந்த விடயத்தில் அதிகாரிகளால் மாத்திரம் பெண்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளை ஒழித்துக் கட்டிவிட முடியாது. அதற்கு ஒட்டு மொத்த சமுதாயமும் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.

இந்தக் கருமங்களை செவ்வனே நிறைவேற்றி பெண்களுக்கான வாழ்வியல் உத்;தரவாதத்தை அளித்தாலே போதும் இந்த உலகம் அபிவிருத்தியையும் அமைதியையும் பெற்று விடும்.” என்றார்

இந்நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலைப் பிராந்திய சட்ட அதிகாரி ஏ.எச். சியாமிலா, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிழக்குப் பிரிவு பொறுப்பதிகாரி நிரோஷா தயானந்த,வெருகல் பிரதேச சபையின் செயலாளர் சுஜாதா வரதகுமார் பிரதேச செயலக உதவிச் செயலாளர் துஷிதீபா உமாபதி, பிரதேச கால்நடை வைத்தியர் எம்.எச். பாத்திமா றஸ்னா, ஈச்சிலம்பத்து பெண்கள் பொலிஸ் பிரிவு அலுவலர் ஜே.ஏ. நிமாலி தராங்கனி, பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் சௌம்யா சோமேஸ்வரன், உட்பட பிரதேச செயலக அதிகாரிகள், அலுவலர்கள், கிராம அலுவலர்கள், இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ரீ. திலீப்குமார் பிரதேச மகளிர் சங்கங்களின் பிரதிநிதிகள், யுவதிகள் மாணவிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க