பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்துவிதமான உதவிகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை!
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்துவிதமான உதவிகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பணிப்புரை வழங்கியுள்ளதாக சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஆராயும் உயர்மட்டம் கூட்டம் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் அமைச்சர்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்டு அரச அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்கள்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் இணைப்பாக்கத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி, பாரளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் பிர்தோஸ் நழீமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் அனர்த்த முகாமைத்துவப்பிரிவினர், திணைக்களங்களின் தலைவர்கள் கலந்துகொண்டதுடன் இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் அனர்த்தங்களினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் பொதுமக்களின் பாதுகாப்பு, அவர்களுக்கான உணவு விடயங்கள், சுகாதார நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பான பயண ஏற்பாடுகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.
எவ்வாறாயினும் மக்களை பாதுகாக்கும் வகையிலான அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக இதன்போது அமைச்சர்களினால் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருமளவான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன, பாதிப்புகள் குறித்த விபரங்கள் பெறப்பட்டதும் அதற்கான நஸ்டஈடுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளது, அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வேலைத்திட்டங்களுக்கு தேவையான நிதிகளை அரசாங்கம் ஒதுக்குவதற்கு தயாராகவேயுள்ளது.
ஜனாதிபதியினால் அனர்த்தம் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு சென்று மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளன. தேவையான அனைத்து உதவிகளும் அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் இருவரும் பாரளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் பிர்தோஸ் நழீமி உள்ளிட்டோர் நாவலடி நாமகள் வித்தியாலயத்தில் உள்ள இடைத்தங்கள் முகாமினை பார்வையிட்டதுடன், அங்கு தங்கியிருப்போரிடம் நமது குறைகளை கேட்டறிந்து கொண்ட மையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்