நீதிமன்றில் முன்னிலையானார் டக்ளஸ் தேவானந்தா!
முன்னாள் அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை மீளப் பெறப்பட்டுள்ளது.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமது சட்டத்தரணி ஊடாக கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை முன்னிலையானதை அடுத்து இந்த பிடியாணை மீளப் பெறப்பட்டுள்ளது.
முன்பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அடுத்த வழக்கு விசாரணைகளின் போது மன்றில் முன்னிலையாக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு வெள்ளத்தைப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தமது வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்பதை அறிந்தும், தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு காசோலைகளை வழங்கி நிதி மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிவித்து முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முறைப்பாடளித்திருந்தார்.
இதற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்றுவந்தது.
எனினும் குறித்த வழக்கிற்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ச்சியாகப் பிரசன்னமாகியிருக்கவில்லை.
இந்தநிலையில், குறித்த வழக்கு தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கடந்த 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது சமர்ப்பணங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.