
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு
கம்பஹாவில் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்தார்.
51 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தார்.
கடந்த 10 ஆம் திகதி அதிகாலை மல்வத்துஹிரிபிட்டி – படபொல பகுதியில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவரை கைது செய்வதற்காக சென்ற போது, கைது செய்ய சென்ற சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியை பறிக்க முற்பட்டுள்ளார்.
இதன் போது துப்பாக்கி இயங்கியதில் பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார்.
இதனையடுத்து, சந்தேகநபர் துப்பாக்கியுடன் தப்பி சென்றுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன்பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.