திருப்பழுகாமம் சிவன் ஆலய சங்காபிஷேகம்

-மட்டக்களப்பு நிருபர்-

திருப்பழுகாமம் ஸ்ரீ கௌரி அம்பாள் சமேத கேதீஸ்வரநாதர் (சிவன்) ஆலய சங்காபிஷேகம் இன்று புதன்கிழமை பக்த அடியார்கள் புடைசூழ, வேதபாராயணங்கள் முழங்க 1008 சங்குகளால் நிகழ்த்தப்பட்டது.

இதனை முன்னிட்டு காலை வேளையில் கேணிக்கரைப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து பெண்கள் பாற்குடம் ஏந்தி திருப்பழுகாமம் பிரதான வீதி வழியாக ஆலயத்தை வந்தடைந்தனர்.

இதன்போது பெண்களால் எடுத்து வரப்பட்ட பால் ஸ்ரீ கௌரி அம்பாள் சமேத கேதீஸ்வரநாதருக்கு (சிவன்) அபிஷேகம் செய்யப்பட்டது.

இச்சங்காபிஷேகப் பெருவிழாவினை பிரதிஷ்டா பிரதமகுரு சிவாசாரிய திலகம் மதுர சாதகர் தேவி பூஜா துறந்தரர் சிவஸ்ரீ கேதீஸ்வரப் பவித்திரக் குருக்கள் தலைமையில் சாதக வேந்தன் சிவஸ்ரீ பால துஸ்யந்தக் குருக்கள்,வேத சுரபி சிவஸ்ரீ கேதீஸ்வர ஹரிஹர குருக்கள்,பிரம்பஸ்ரீ தர்ஷன் சர்மா,பிரம்மஸ்ரீ ரா.பிரபு ஷர்மா,பிரம்மஸ்ரீ தனுஷன் ஷர்மா,சிவஸ்ரீ சுதாகரக் குருக்கள்,சிவஸ்ரீ சதா பரணிதரக் குருக்கள்,சிவஸ்ரீ பால பிரதீபக் குருக்கள்,சிவஸ்ரீ கெ.மாதவக் குருக்கள்,சிவஸ்ரீ பவித்திரன் குருக்கள் மற்றும் ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சிறிதரசர்மா ஆகியோர் இணைந்து நிகழ்த்தி வைத்தனர்.

இச் சங்காபிஷேகப் பெருவிழாவினைக் காண மட்டக்களப்பு மாவட்டத்தின் நாலாபக்கமும் இருந்து பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் வருகை தந்திருந்ததைக் காண முடிந்தது.

இச்சங்காபிஷேகப் பெருவிழாவினைச் சிறப்பிக்கும் வகையில் கும்பாபிஷேக மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.