திருகோணமலை மாவட்டத்தில் 15000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நேற்று வியாழக்கிழமை வரை 3372 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 15000 ஏக்கருக்கு  மேற்பட்ட விவசாய நிலங்கள் அழிவடைந்து இருப்பதாகவும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

வெள்ள அனர்த்த நிலைமை தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்த மாவட்டத்தில் 14 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 254 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவுகளை வழங்கி வருகின்றோம்.

குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் கடலுக்குச் சென்ற உயிரிழந்த சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது என்றும் தெரிவித்தார்.

மாவட்ட செயலாளர் மேலும் கூறுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களும் மக்களுக்கு உதவும் வகையில் பிரதேச செயலக ஊழியர்கள், முப்படையினர், சுகாதாரப் பிரிவினர் மற்றும் சமய சமூக அமைப்புக்கள் என அனைவரும் 24 மணி நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

சேருவில மற்றும் வெருகல் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் மகாவெலி ஆற்றின் பெருக்கெடுப்பால், கூடிய கிராமங்களுக்கு முன்னெச்சரிக்கை ஆயத்து நிலைகளை தயார்படுத்தி வைத்திருக்கின்றோம்.

மேலும் வெள்ள நீர் தேங்க நிற்கின்ற இடங்களில் இருந்து நீரை கடலுக்குள் வெளியேற்றுவதற்கு உரிய சகல ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.