சுவிட்சர்லாந்தில் புர்காவிற்கு தடை ! மீறினால் நூறு முதல் ஆயிரம் அபராதம் ?

சுவிட்சர்லாந்தில் இருந்து -ச.சந்திரபிரகாஷ்-

சுவிட்சர்லாந்தின் புர்கா தடைச் செய்தி உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இருந்தும் சில விதிவிலக்குகளுடன் இந்த தடை சுவிஸில் புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

இத்தடையை சட்டவிரோதமாக மீறுபவர்கள் குறித்த இடத்தில் வைத்து உடனடியாக செலுத்தினால் 100 சுவிஸ் பிராங்குகளாகவும் (இலங்கை பெறுமதியின் படி 32ஆயிரம் ) இதைவிடுத்து வாதிட்டாலோ அல்லது செலுத்த மறுத்தாலோ 1,000 ( இலங்கை பெறுமதியின் படி 3 இலட்சத்து 32 ஆயிரம்) சுவிஸ் பிராங்குகள் வரை அபராதம் விதிக்கப்படும்.

சுவிட்சர்லாந்து முகத்தை மூடுவதற்கு ஏன் தடை விதித்தது?

சுவிட்சர்லாந்தில் ஒரு விடயம் நடைமுறைக்கு அல்லது சட்டமாக்குவதற்கு மக்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படுவது நீண்டகாலமாக நடைமுறையில் உள்ளது.

இதற்கமைவாக 2021 ஆம் ஆண்டில், முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா மற்றும் நிகாப் உட்பட பொது இடங்களில் முகத்தை மூடுவதற்கு ஆதரவாக சுவிஸ் மக்கள் குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் வாக்களித்தனர். ஒரு வாக்கெடுப்பில் இந்த நடவடிக்கை 51.2சதவீதத்தால் நிறைவேற்றப்பட்டது.

4  இலட்சித்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழும் நாட்டில் இந்த தடையை நிறைவேற்றக் கூடாது என தெரிவித்து 48.8 சதவீத மக்களின் நிறைவேற்றப்பட்டதாக முடிவுகள் இருந்தன.

முஸ்லிம் சமூகம் மற்றும் அம்னஸ்டி இன்டர்நேஷனல் போன்ற மனித உரிமை அமைப்புகள் இந்தத் தடையை நிறைவேற்றியதை விமர்சித்தன. ஒரு அறிக்கையில், அம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்தத் தடையை “கருத்துச் சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரம் உட்பட பெண்களின் உரிமைகளை மீறும் ஒரு ஆபத்தான கொள்கை” என்று அழைத்தது.

நாட்டின் ஜனநாயக அமைப்பின் கீழ் சுவிட்சர்லாந்தில் உள்ள மக்களுக்கு அவர்களின் சொந்த விவகாரங்களில் நேரடி பங்கு வழங்கப்படுகிறது. பல்வேறு தேசிய அல்லது பிராந்திய பிரச்சினைகள் குறித்த வாக்கெடுப்புகளில் அவர்கள் தொடர்ந்து வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள்.

முகத்தை மூடுவதற்கு தடை விதிக்கும் திட்டம் வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சியால் (SVP ) கொண்டு வரப்பட்டது மற்றும் “தீவிரவாதத்தை நிறுத்து” போன்ற முழக்கங்களுடன் பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தில் இஸ்லாம் பற்றி நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை, வன்முறையில் ஈடுபடும் தெரு ஆர்ப்பாட்டக்காரர்கள் முகத்தை மூடி புர்கா அணிவதைத் தடை செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டது, இருப்பினும், இது “புர்கா தடை” என்று பரவலாகக் கருதப்பட்டது.

இருப்பினும்,பெண்கள் என்ன அணிய வேண்டும் என்பதை ஆணையிடுவது அரசின் பொறுப்பல்ல என்று வாதிட்டு சுவிஸ் அரசாங்கம் அதை எதிர்த்தது. இருந்தும் சில கட்சிகளால் இந்த உடையினால் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் , சிறுவர்கள் இந்த உடையை அணியும் பெண்களை பார்த்து அச்சப்படுகின்றார்கள் எனவும் தமது வாதங்களை முன்வைத்தனர்.

லூசெர்ன் பல்கலைக்கழகத்தின் (ஜெர்மன் மொழியில்) ஆராய்ச்சியின்படி, சுவிட்சர்லாந்தில் கிட்டத்தட்ட யாரும் புர்கா அணிவதில்லை, சுமார் 30 பெண்கள் மட்டுமே நிகாப் அணிகிறார்கள். 8.6 மில்லியன் மக்களைக் கொண்ட சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையில் சுமார் 5 சதவீதமான முஸ்லிம்கள். அவர்களில் பெரும்பாலோர் துருக்கி, போஸ்னியா மற்றும் கொசோவோவைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

2021 நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்குப் பின்னர் முகத்தை மூடுவதற்கான தடை குறித்த சுவிஸ் பாராளுமன்றத்தின் இறுதி சட்டமன்ற நிறைவேற்றம் செப்டம்பர் 2023 இல் வந்தது. நவம்பர் 2024 இல் தான் இந்தத் தடை ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வரும் என்று அரசாங்கம் தெரிவித்தது.

புர்கா முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதா ?

இந்த நடவடிக்கையில் பொது இடங்கள் மற்றும் பொதுமக்கள் அணுகக்கூடிய தனியார் கட்டிடங்கள் இரண்டிலும் மூக்கு, வாய் மற்றும் கண்களை மூடுவதற்கான உடையை முற்றாக அணிவதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது இருப்பினும், சில விதிவிலக்குகள் இதற்குள் உள்ளன.

இந்தத் தடையானது விமானங்கள் அல்லது இராஜதந்திர மற்றும் தூதரக வளாகங்களுக்குப் பொருந்தாது, மேலும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பிற புனிதத் தலங்களிலும் முகத்தை மூடலாம்.

சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான காரணங்களுக்காக, பூர்வீக பழக்கவழக்கங்களுக்காக அல்லது வானிலை நிலைமைகள் காரணமாக முகத்தை மூடுவது தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்றும் இதில் கலை மற்றும் பொழுதுபோக்கு தளங்களிலும் விளம்பரத்திற்காகவும் அவை அனுமதிக்கப்படும்.

கருத்து மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரம்: அதிகாரிகளால் முன் ஒப்புதல் வழங்கப்பட்டு, பொது ஒழுங்கு ஆபத்தில் இல்லாத பட்சத்தில், பொது ஆர்ப்பாட்டங்களின் போது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக முகக்கவசங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

சட்டம் அமலுக்கு வரும்போது, அதன் நியாயத்தன்மை மற்றும் தனிப்பட்ட சுதந்திரங்களுக்கான தாக்கங்கள் குறித்த விவாதங்கள் சுவிட்சர்லாந்திற்குள்ளும் சர்வதேச அளவிலும் தொடர்கின்றன.