சுற்றுலாப் பயணிகளின் செயற்பாடுகள் குறித்து அவதானம்
அறுகம்பையில் சுற்றுலா விசாவில் தங்கியிருந்து, வியாபாரம் மற்றும் மத நடைமுறைகள் போன்ற பொழுதுபோக்கிற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இஸ்ரேலிய பிரஜைகள் உட்பட சுற்றுலாப் பயணிகள் பற்றிய முறைப்பாடுகள் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சில சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா வீசாவில் வர்த்தகம், மத ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடல் அல்லது சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்பதை கடந்த கால சம்பவங்கள் காட்டுகின்றன என அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத், இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
தற்போது அறுகம் குடாவில் உள்ள இஸ்ரேலியர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டு பிரஜைகளும், சுற்றுலா விசாவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஹேரத் தெளிவுபடுத்தினார்.
“இலங்கையில் விடுமுறைக்கு வருபவர்களுக்குப் பொருத்தமற்றதாகக் கருதப்படும் தொழில், வியாபாரம் அல்லது பிற நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அதிகாரிகளுக்கு அது குறித்து அறிவிக்குமாறு அப்பகுதியில் உள்ள விடுதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.