சீரற்ற வானிலை: நீரில் மூழ்கும் மட்டக்களப்பு
நாட்டில் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் கடுமையான மழைவீழ்ச்சி பதிவானது.
இந்நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் அமைந்துள்ள உன்னிச்சை குளத்தின் மூன்று வான் கதவுகளும் 10 அடி வரை திறக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக அதிக மழைவீழ்ச்சி கிடைக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுவதனால் அனைவரும் வெள்ள அனர்த்தத்திற்குரிய முன்னாயத்தத்துடன் இருக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.எஸ்.சியாத் மாவட்ட ஊடகப் பிரிவின் ஊடாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று பெய்த கன மழை காரணமாக மட்டக்களப்பு வாவி நிறைந்து வாவியை சுற்றியுள்ள கல்லடி, அரசடி, சின்ன உப்போடை, சீலாமுனை போன்ற பகுதிகளில் ஆற்று நீர் நுழைந்துள்ளது.
இதனால் கல்லடி பாலத்தினூடான போக்குவரத்து நீண்டநேரம் தாமதமடைந்தது.
இதேவேளை மட்டக்களப்பு – ஊரணி சத்துரக்கொண்டான் பகுதிகளில் தற்போது ஆற்றுப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மட்டக்களப்பு – திருமலை பிரதான வீதி ஊரணி, சத்துரக்கொண்டான் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மட்டக்களப்பு பூம்புகார் பகுதியிலும் ஆற்று நீர் வீடுகளுக்குள் உட்புகுந்ததாக குறித்த பகுதிகளில் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர் மழை காரணமாக சித்தாண்டி பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் சித்தாண்டி பகுதியிலுள்ள இரண்டு பாடசாலைகளுக்குள் மக்கள் தற்போது இடம்பெயர்ந்துள்ளனர்.
இதேவேளை மாவடிஓடை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை வெள்ளத்தில் மக்கள் சிக்கிய நிலையில் செங்கலடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவத்தினர் குறித்த பகுதி மக்களை மீட்க முற்பட்ட நிலையில் அதனை மேற்கொள்ள முடியாமல் முயற்சியை கைவிட்டதாகவும் மீண்டும் இன்று புதன்கிழமை படகு மூலம் கடற்படையினர் அவர்களை மீட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.