சாமர சம்பத் தஸநாயக்கவுக்கு பிணை

ஊவா மாகாண சபையின் 6 கணக்குகளின் நிலையான வைப்புகளை முதிர்வு காலம் நிறைவடைவதற்கு முன்னர் நீக்கப்பட்டமை தொடர்பான வழக்கிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த சமர்ப்பணங்களைப் பரிசீலித்த நீதவான், சந்தேக நபரை ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா இரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதியான ஐந்து சரீரப் பிணையிலும் விடுவிக்க உத்தரவிட்டார்.

2016 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபையின் முதலமைச்சரால் அந்த மாகாணத்தின் முன்பள்ளி பாடசாலை பிள்ளைகளுக்குப் புத்தகப்பைகள் வழங்குவதற்காகத் தேசிய சேமிப்பு வங்கியின் அனுசரணை கோரப்பட்டுள்ளது.

அந்த கோரிக்கையை வங்கி நிராகரித்ததன் பின்னர் குறித்த மாகாண சபைக்குச் சொந்தமான 06 நிலையான வைப்பு கணக்குகள் முதிர்வு காலம் பூரணமாவதற்கு முன்னர் நீக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக ஊவா மாகாண சபைக்கு 173 இலட்சத்திற்கு அதிகமான தொகை நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பான வழக்கில் அவர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

ஏற்கனவே அவர் பிரிதொரு வழக்கில் ஏப்ரல் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க