சாந்தனை விடுவித்தது போன்று தம்மையும் விடுவிக்க கோரி உண்ணாவிரத போராட்டம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தனை விடுவித்ததை போன்று தம்மையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஏனையவர்களும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர்கள் நேற்று புதன்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலருக்கு ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய இருவரும் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளனர்.

இதனையடுத்து சிறப்பு முகாமில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகன், சாந்தன்,  ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர்  திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சாந்தனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகிறார்.

 

சாந்தன் விடுவிக்கப்பட்டு அவரை நாட்டுக்கு அழைத்து வருவதில் எந்தவித ஆட்சேபனைகளும் இல்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எனவே,  சாந்தனை விடுவித்ததை போன்று தம்மையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஏனையோரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது