காணாமல் போனோர் அலுவலகத்தைப் பாதிக்கப்பட்ட தமிழ்ச் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை: சாணக்கியன்

காணாமல் போனோர் அலுவலகத்தைப் பாதிக்கப்பட்ட தமிழ்ச் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற பொறிமுறையில்லாத எந்தவொரு முறையையும் ஏற்றுக்கொள்வதற்குப் பாதிக்கப்பட்ட சமூகம் தயாராகவில்லை என சாணக்கியன் கூறினார்.

நாடாளுமன்ற அமர்வில் இன்றைய தினம் புதன் கிழமை கலந்து கொண்டு இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இந்த விடயங்களில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். நாடாளுமன்றத்தில் இன்றைய கேள்வி நேரத்தின் போது பிரதமரிடம் இது தொடர்பில் வினவியிருந்தார்.

இதேவேளை இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 16 வருடங்களாக இந்த பிரச்சினைகளுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தாம் ஆட்சிக்கு வந்து 6 மாதங்களே ஆவதாகவும், இந்த குறித்த காலப்பகுதியில் தம்மாலான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் பிரதமர் கூறினார்.

மேலும் நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே செயற்படுவதாகவும், இது ஒரு சவால் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

காணாமல் போனோர் மற்றும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் பெயரளவில் செயற்பட்டனவே தவிர, உறுதியாகச் செயற்படவில்லை எனச் சுட்டிக் காட்டினார்.

இதன் காரணமாகவே மக்கள் இந்த நிறுவனங்களை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.

இவற்றை நிவர்த்தி செய்வதற்காக, தாம் தொடர்ந்து செயற்பட்டு வருவதாகப் பிரதமர் ஹரிணி குறிப்பிட்டார்.

16 வருடங்கள் கடந்த இந்த விடயங்களை விசாரிப்பது இலகுவானது அல்ல என்றாலும் நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் செயற்படுவதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க