கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தை சுமூகமாக தீர்க்க ஆளுநர் செந்தில் தொண்டமான் நடவடிக்கை

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்திற்கு தீர்வொன்றை காணும் நோக்கத்தோடு நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்முனை முஸ்லிம் பிரிவு மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலகங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த கிழக்கு மாகாண ஆளுநர் இரு தரப்பினரோடும் பேசி இந்த விடயத்தை சுமூகமாக தீர்ப்பதற்கான முயற்சிகளை எடுத்திருந்தார்

அந்த வகையில் கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாக உரிமைகளை மீட்பதற்காக 98 வது நாளாகவும் போராடி வருகின்ற பிரதேச பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள் போராட்ட குழுவில் இருந்து சில பிரதிநிதிகள் உள்ளிட்டோரோடு கல்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்

அந்த கலந்துரையாடலில் வருகின்ற வாரம் அளவிலே அம்பாறை மாவட்ட செயலகத்தில் தமிழ் முஸ்லிம் தரப்புகளின் பிரதிநிதிகள் 10 வீதம் அழைத்து தமது தரப்பு நியாயங்கள் எல்லை நிர்ணய விடயங்கள் போன்றவற்றை பரிசீலித்து இந்த பிரதேச செயலக விவகாரங்களை சமூகமாக தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

அதற்கான தயார்படுத்தல்கள் திட்ட வரைபுகளோடு தயாராகுமாறும் வடக்கு பிரதேச செயலக நிருவாக எல்லைகள் அலுவலக நிருவாக பிரச்சனைகள் போன்ற பல்வேறு விடயங்களை கேட்டு அறிந்ததோடு சிவில் சமூகப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட மக்கள் பிரதிநிதிகள் போராட்டக்காரர்கள் சமூகமட்ட அமைப்புகள் அனைவரது கருத்துக்களையும் உள்வாங்கி விரைவிலே இரு தரப்பும் ஏற்கக்கூடிய சமூகமான ஒரு தீர்வை பெறுவதற்கான முயற்சிகளுக்கு தான் நடுநிலையாக இருந்து செயல்பட முடியும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பிலே அவரோடு மாவட்ட அரசாங்க அதிபர் மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் பாதுகாப்பு தரப்பு உயர் அதிகாரிகள் அரசு அதிகாரிகள் போன்றவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்