ஒரு ஹீரோவும் ஒரு துயரமும்!

 

தொழில்நுட்பம் மனிதனை ஆளும் அளவிற்கு வளர்ந்து விட்ட நிலையில் சமூக வலைத்தளங்கள் ஒவ்வொரு மனிதருடைய தனிப்பட்ட வாழ்க்கை மீதும் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

சமூக வலைத்தளங்களில் ஆக்கபூர்வமான விடயங்கள் இடம்பெற்றாலும் கூட இழப்புகளும் சமூக வலைத்தளங்களினால் இடம்பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன.

தற்போது இந்த சமூக வலைத்தளங்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்திய இரண்டு சம்பவங்களை இங்கு ஆராய்ந்து பார்க்கவிருக்கிறோம்

முதலாவதாக ஒரு சம்பவத்தை இங்கு பார்க்கலாம்.

கடந்த ஒரு வாரகாலமாக இலங்கையில் குறிப்பாக தமிழ் மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகின்ற விடயம் தான் வைத்தியர் அர்ச்சுனா விடயம்.

யாழ் மாவட்டம் சாவகச்சேரி வைத்தியசாலையின் அத்தியட்சகராக பணிபுரிந்த வைத்தியர் அர்ச்சுனா என்பவர் குறித்த வைத்தியசாலையில் சில அபிவிருத்திகளை முன்னெடுக்க முனைந்த போது அங்கு இடம்பெற்றுக்கொண்டிருந்த ஊழல்களை கண்டுபிடிக்கிறார்.

அதன்பின் அவர் அவற்றை ஆராய முற்படும் போது அங்கு அவருக்கு சக வைத்தியர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது.

அதன்பின் வைத்தியர் அர்ச்சுனா இந்த விடயங்களை தனது முகப்புத்தகத்தில் காணொளியாக பதிவிடுகின்றார்.

இந்த காணொளியை பார்த்த அவரது முகப்புத்தக நண்பர்கள் அதை பகிர்கிறார்கள். அப்படி பகிரப்பட்ட காணொளி முகப்புத்தகத்தில் வைரலாக பரவியது.

அதனைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்கள் படையொன்று உருவாகியது.

இப்பொழுது வைத்தியர் அர்ச்சுனா விடயம் ஜனாதிபதி மட்டத்திற்கு சென்றுள்ளது. அது மட்டுமன்றி வடமாகாண சுகாதார துறைக்குள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டார் வைத்தியர் அர்ச்சுனா

ஒரு வார காலத்திற்குள் இவ்வாறான ஒரு பாரிய தாக்கம் ஒரு வைத்தியரின் முயற்சியில் எவ்வாறு ஏற்பட்டது? இந்த கேள்விக்கு பதில் அனைவரும் அறிந்ததே!

முகப்புத்தகம் என்ற ஒரு சமூக வலைத்தளம் இருந்திருக்காவிட்டால் வைத்தியர் அர்ச்சுனாவையும் யாருக்கும் தெரிந்திருக்காது. சாவகச்சேரி வைத்தியசாலையில் என்ன நடைமுறை இதுவரை இருந்ததோ அதே நடைமுறையுடன் வைத்தியசாலை இயங்கிக்கொண்டிருந்திருக்கும்.

இது ஒரு சாதகமான விடயம் தான். ஊழல்களை வெளிக்கொணர வைத்தியர் அர்ச்சுனா முயலும் போது அவருக்கு கைகொடுத்தது சமூக வலைத்தளம் தான். இல்லையென்றால் அவர் மக்களுக்கு தெரியப்படுத்த நினைத்த ஊழல் விவகாரங்கள் அவரோடே இருந்திருக்கும். யாருக்கும் தெரிய வந்திருக்காது.

இரண்டாவதாக ஒரு சம்பவத்தை இங்கு பார்க்கலாம்.

கடந்த 8 ஆம் திகதி இணைய பகடிவதைக்கு இலக்கான இந்திய இளம் பெண் ஒருவர் மலேசியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மலேசியா பத்துகேவ்ஸ் ஸ்ரீ கோம்பாக்கைச் சேர்ந்தவரான் ஈஷா எனப்படும் இராஜேஸ்வரி என்ற இளம்பெண் அண்மைய காலமாக சமூக வலைத் தளங்களில் பகிடிவதைக்கு ஆளாகி வந்துள்ளார’

குறிப்பாக டிக் டொக்கில் அப் பெண்ணுக்கு எதிராக அவதூறுகள் பரப்பப்பட்டுள்ளது.

இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான அவர் இணைய தொல்லை தாங்காமல் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ராஜேஸ்வரியை அவதூறாகப் பேசியதுடன், அவரை மிரட்டியதற்கான இரண்டு டிக் டொக் பதிவுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட இரண்டு டிக் டொக் கணக்குகளிலும். ராஜேஸ்வரியின் புகைப்படங்கள் காணொளியின் உள்ளடக்கத்தின் பின்னணியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும்இ அதில் அச்சுறுத்தல்களும் தவறான மற்றும் ஆபாசமான வார்த்தைகளும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட அந்த உள்ளடக்கம் நீக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.

ஆதரவற்ற இல்லம் ஒன்றில் உதவியாளராகப் பணி புரிந்து வரும் பெண் ஒருவர் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளாக மலேசிய நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை சம்பவம் தொடர்பில் மற்றொருவரும் தேடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சமூக வலைத்தளங்களில் நீதிக்காக குரல் கொடுக்கும் ஒரு சமூக அக்கறையுள்ள பெண்ணாக ஈஸா இருந்துள்ளார். இவ்வாறான ஒரு நிலையில் அவர் தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு அதே சமூக வலைத்தளங்களில் அழுத்தங்கள் வழங்கப்பட்டள்ளது.

சமூக வலைத்தளங்கள் ஒருவரது வாழ்க்கையில் எந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்தும் என்பதற்கு மேற்குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களிலும் உள்ள இரண்டு நபர்களும் சமகாலத்தில் சிறந்த உதாரணம்.

சாதாரண ஒரு மனிதன் ஒரு சமூகத்தின் ஹீரோவாக மாறுவதற்கும் வாழவேண்டிய ஒரு இளம் பெண் மண்ணில் புதைக்கப்படுவதற்கும் இந்த சமூக வலைத்தளம் காரணமாக அமைந்திருக்கின்றது.

(Shabeena Somasuntharam – Journalist /Dip.in Psychology)

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்