இரவு நேரப் பொருளாதாரம் நாட்டின் அந்நிய செலாவணியை 70 சதவீதம் வரை அதிகரிக்க உதவும்

இரவு நேரப் பொருளாதாரத்திற்கு மாறுவதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை 70 சதவீதம் வரை அதிகரிக்க முடியும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

இதற்காக சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரக் கூடிய இடங்கள் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களையும் ஒழுங்குமுறைகளையும் திருத்தியமைத்து தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

இரவு நேர பொருளாதாரம் தொடர்பில் சில தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் உலகின் பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு இரவு நேரப் பொருளாதாரம் முக்கிய பங்காற்றுவதாகவும் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் இரவு நேரங்களில் பல்வேறு பொழுதுபோக்கு நடவடிக்கைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சுற்றுலாப் பயணிகளுக்கான பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் இரவில் உணவகங்களைத் திறந்து வைப்பது உள்ளிட்ட இரவு நேரப் பொருளாதாரத்தை நாடுவதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை 70 சதவீதம் அதிகரிக்க முடியும்.

உலகின் பல நாடுகள் பொருளாதார வளர்ச்சிக்கு இரவு நேரப் பொருளாதாரத்தின் பங்களிப்பை பயன்படுத்திக் கொள்கின்றன.

இரவு நேரப் பொருளாதாரம் தொடர்பில் சில தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

ஆனால் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பொழுதுபோக்கிற்கான வாய்ப்புகள் இருக்க வேண்டும்.

குறிப்பாக கடலோரப் பகுதிகளிலும் கொழும்பு போன்ற நகர்ப்புறப் பகுதிகளிலும் முக்கிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

எனவே, இதுபோன்ற இடங்கள் தொடர்பான சட்ட விதிமுறைகளை திருத்தம் செய்து தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்