ஆறுமுகம் தொண்டமான் முதலாளிமார் சம்மேளனத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்

-பதுளை நிருபர்-

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளர் அமரர் ஆறுமுகம் தொண்டமானின் 4 ஆவது சிரார்த்த தினம் நாளை அனுட்டிக்கப்படவுள்ளதை முன்னிட்டு பதுளை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இ.தொ.கா முக்கியஸ்தரும் முன்னாள் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டி.வி. சென்னன் தெரிவித்தார்

இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்

இ.தொ.காவின் பொதுச் செயலாளராக அமரர் ஆறுமுகம் தொண்டமான் இருந்த காலத்தில் தோட்டங்களை நிர்வகித்து வரும் முதலாளிமார் சம்மேளனத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.

தொழிலாளர்களின் நாட்சம்பள உயர்வு கோரிக்கை உட்பட பல்வேறு அடிப்படை தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்காக கம்பனி நிர்வாகங்களிடம் அவர் மேற்கொண்ட அணுகுமுறை கம்பனி நிர்வாகத்தினரை அச்சமடையச் செய்திருந்தது.

ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு போராட்டத்தின் போது பொகவந்தலாவ தோட்டப்பகுதியில் ஒருநாள் போராட்டம் கம்பனி நிர்வாகத்தினரை சம்பள விவகாரத்தில் இணக்கப்போக்குடன் செல்வதற்கு வழி அமைத்தது.

இன்றைய சம்பள உயர்வு போராட்டத்தின் போது அமரர் ஆறுமுகம் தொண்டமான் உயிருடன் இருந்து இருந்தால் கம்பனிகள் இவ்வளவு தூரம் வீராப்பு காட்டி முரண்பட்டிருக்காது.

அவரின் இழப்பு உழைக்கும் மலையக பாட்டாளி வர்க்கத்திற்கு பேரிழப்பாகும்.

அன்னாரின் தலைமைத்துவத்துவத்தை நினைவுகூரும் வகையில் பதுளை மாநில இ.தொ.கா பணிமனையில் விசேட அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், தோட்டங்கள் தோறும் ஆலயங்களில் ஆத்ம சாந்திக்கான விசேட பூஜை வழிபாடுகளும், நலனோம்பல் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன என்றார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்