அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை என வெளியான செய்திகள் பொய்யானவை
2025 ஆம் ஆண்டு அமுல்படுத்தப்படவுள்ள சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை என வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்பதோடு அதற்கான அனுமதி ஏற்கனவே கிடைத்துள்ளது.
2024 மே மாதம் 27 திகதியிட்ட எண் 24/பல்வகை (020) என்ற அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம், அரச சேவையில் உள்ள பல்வேறு சேவைக் குழுக்களுக்கு இடையே உள்ள சம்பள முரண்பாடுகளை ஆய்வு செய்து, 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில் உள்ளடக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கூடிய வகையில், அரச சேவையின் அனைத்து பிரிவுகளினதும் சம்பளம், ஊதியம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை மீளாய்வு செய்து மேற்கொள்ளவேண்டிய திருத்தங்கள் தொடர்பான பரிந்துரைகளை வழங்க ஒரு நிபுணர் குழு நியமிக்கப்பட்டது. அந்த நிபுணர் குழுவானது அரச துறையின் 81 பிரதான தொழிற் சங்கங்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடி, உரிய தகவல்களை ஆய்வு செய்து இடைக்கால அறிக்கையை தயாரித்துள்ளது.
இது தொடர்பாக குழுவின் தலைவர் உதய ஆர். செனவிரத்ன தெளிவுபடுத்தும் போது, இந்த அறிக்கை தயாரிப்பில் மேலும் பல தொழிற் சங்கங்கள், பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் சுமார் 391 தனிநபர்களால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு தகவல்கள் பெறப்பட்டன என்று தெரிவித்தார்.
தற்போதுள்ள அரச நிதி வாய்ப்புகள் மற்றும் அரச துறை ஊழியர்கள் எதிர்கொள்ளும் சவால்களை கருத்தில் கொண்டு, அரச செலவை முகாமைத்துவம் செய்வதற்கான முன்மொழிவுகளுடன்,
ஏற்கனவே உள்ள ஊதிய கட்டமைப்புகளை திருத்துவதற்கான அளவுகோள்கள் மற்றும் தரநிலைகள் அத்துடன் அரச செலவுகளை குறைத்தல் மற்றும் வருமானம் ஈட்டும் மூலோபாயங்களை உள்ளடக்கிய கொள்கை ரீதியிலான கட்டமைப்பை இந்த இடைக்கால அறிக்கை, பரிந்துரைக்கிறது
அதன்படி, அமைச்சரவைப் பத்திரம் எண் 24/1609/601/097, ஆன “அரச சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகளைக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் இடைக்கால அறிக்கை” நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினினால் 08-12-2024 ஆம் திகதி அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த இடைக்கால அறிக்கையை , அமைச்சரவை பரிசீலித்து கலந்துரையாடிய பின்னர், அந்த இடைக்கால அறிக்கையின் பந்தி 03 இல் குறிப்பிடப்பட்டுள்ள (3.1) முதல் (3.18) வரையிலான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கொள்கை ரீதியிலான அங்கீகாரம் அளித்தல் மற்றும் மேற்படி இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை 2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் உட்படுத்தி நடைமுறைப்படுத்தும் வகையில் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கருதி அனைத்து அரச ஊழியர்களுக்கும் (ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை திருத்தத்திற்கு உட்படும் வகையில்) ரூ.25,000/- மாதாந்த வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை வழங்கல்,
அரச சேவையில் குறைந்தபட்ச ஆரம்ப மாதாந்தச் சம்பளம் 24 முதல் 50 – 60 வீதம் வரையில் அதிகரிப்பதோடு வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுடன் மொத்த சம்பளம் ரூ. 55,000 ஆக மாற்றி அதற்கேற்ப ஏனைய அனைத்து பதவிகளுக்குமான அடிப்படை சம்பளத்தை மாற்றியமைத்தல், வர்த்தக அரச நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தவிர அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இந்த புதிய சம்பளம் மற்றும் கொடுப்பனவு முறையை நடைமுறைப்படுத்துதல்,
2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்ற அரச அதிகாரிகளுக்கு அவர்களுக்கு உரிய சம்பள அதிகரிப்புகளை வழங்கி அவர்களின் ஓய்வூதியங்களை மீளாய்வு செய்தல் மற்றும் அது தொடர்பான முரண்பாடுகளைத் தீர்த்தல்,
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு, கடமையில் உள்ள அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவின் 50%க்கு சம்மாகும் வகையில் ஜனவரி 2025 முதல் வழங்குதல்,
தற்போதுள்ள வரிக் கொள்கைகளுக்குள் இந்தச் செலவுகளை நிர்வகிப்பதற்கு உட்பட்டு, இந்த சம்பள முறை மற்றும் முன்மொழியப்பட்ட சம்பள முறை 2025 ஜனவரி 01 முதல் நிதி வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு படிநிலையாக செயல்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேற்படி நிபுணர் குழு தமது இறுதி அறிக்கையை 23.08.2024 அன்று ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதுடன், குறித்த அறிக்கையின் 01 முதல் 08 வரையான பரிந்துரைகளால் முன்வைக்கப்பட்டுள்ள அரச சேவைகளின் வகைப்பாடு, அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள், ஓய்வூதிய வேறுபாடுகளை நீக்குதல், விதவைகள், தபுதாரர்கள் மற்றும் அநாதைகள் மற்றும் அக்ரஹார செலுத்தல்கள் தொடர்பான பரிந்துரைகள் மற்றும் திருத்தங்கள் 01.01.2025 முதல் நடைமுறைப்படுத்துவதற்கு கொள்கை ரீதியிலான அங்கீகாரத்தை வழங்குதல், அந்த பரிந்துரைகள் 2025 வரவு செலவு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
எனவே, இவ்வாறான உணர்வுபூர்வமான விடயங்களை வெளியிடும் போது மக்களை தவறாக வழிநடத்தும் பொய்யான செய்திகளை வெளியிடாமல் உண்மைகளை ஆராய்ந்து சரியான தகவல்களை மக்கள் மயப்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.