
அமெரிக்கா விதித்த வரி : எதிர்த்து நிற்பது உத்தி அல்ல – சஜித் பிரேமதாச
உலகெங்கிலும் உள்ள 25 நாடுகள்மீது வரிகளை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 44% வரியை விதிக்கவும் அமெரிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
இந்த புதிய வரிகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் அமுல்படுத்தப்படும் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமெரிக்கா விதித்த வரிகள்குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இலங்கை மீதான 44% அமெரிக்க வரி என்பது வெறும் வர்த்தகப் பிரச்சினை மட்டுமல்ல, அது ஒரு விழிப்புணர்வுக்கான அழைப்பு என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
அந்தப்பதிவில் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தற்போது அரசாங்கத்தில் இருப்பவர்கள் கடந்த காலத்தில் ஒவ்வொரு வர்த்தக ஒப்பந்தத்தையும் தடுத்தனர்.
உலகமயமாக்கல் மீது நம்பிக்கையற்றுப் போயினர். முதலீட்டை ஊடுருவலாகப் பார்த்தனர். அந்த மரபு முடிவுக்கு வர வேண்டும். அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும். இலங்கைக்கு ஒரு மூலோபாய மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. சிந்தனை உணர்வுகளுக்கு மேல் கூட்டாண்மைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சில உள்ளூர் பங்காளிகளைத் திருப்திப்படுத்துவதற்காக வெறுப்புணர்வை வெளிப்படுத்துவதை நிறுத்த வேண்டும். இந்தியா, ஆசியா மற்றும் பங்களாதேசுடன் ஆசியாவை மையமாகக் கொண்ட வர்த்தக உத்தியை உருவாக்க வேண்டும்.
வரிகளிலிருந்து உற்பத்தி சார்ந்த, முதலீட்டாளர் வளர்ச்சிக்கு மாற வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, ஏனைய நாடுகளின் பிராந்திய நலன்களை அமைதியாக மீறுவதை நாம் நிறுத்த வேண்டும்.
பரஸ்பர நலன்களைப் பாதுகாப்பதே முன்னோக்கிச் செல்லும் ஒரே வழி. எதிர்த்து நிற்பது உத்தி அல்ல. முதிர்ந்த நாடுகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. நாமும் அதைச் செய்ய வேண்டிய நேரம் இது” என சஜித் பிரேமதாச தமது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்