ஹட்டன் மாணிக்கப் பிள்ளையார் கோவிலில் களைகட்டிய பொங்கல் விழா!
-மஸ்கெலியா நிருபர்-
மலையகத்தின் பிரதான தைப்பொங்கல் விழா இன்று வியாழக்கிழமை காலை ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் கோவிலில் மிக விமரிசையாக நடைபெற்றது.
கோவிலின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ சண். மதுர குருக்கள் தலைமையில், பெருமளவிலான பக்தர்களின் பங்கேற்புடன் இந்த விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
சூரிய உதயத்தன்று, சம்பிரதாய முறைப்படி கோவில் வளாகத்தில் பொங்கல் பொங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சூரிய பகவானுக்குப் படையலிட்டு ஆசீர்வாதம் பெறும் நிகழ்வும் விசேட பூஜைகளும் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில், தோட்டப் பகுதிகளில் இருந்தும், நகரைச் சூழவுள்ள பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பெருமளவிலான இந்து பக்தர்கள் புத்தாடை அணிந்து, மிகுந்த பக்திப் பரவசத்துடன் கலந்து கொண்டனர்.
உலக மக்கள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் சுபீட்சம் கிடைக்க வேண்டி விசேட பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக ஹட்டன் நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் விழாக்கோலம் பூண்டிருந்தன.





