ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமையவே உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டது
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே, ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளதாக கிரிக் இன்போ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த தீர்மானத்தை எடுப்பதற்காக தொலைக் காணொளி ஊடாக இடம்பெற்ற அவசர கூட்டத்தில், ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா பங்கேற்றுள்ளதாக அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
உடன் அமுலாகும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை, ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை நேற்று வெள்ளிக்கிழமை முதல் இடைநிறுத்தியது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிர்வாக நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் தலையீடு காணப்படுவதனால் அதன் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
உறுப்பினர் என்ற கடப்பாட்டை பாரதூரமான முறையில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மீறியுள்ளதாகவும், அதன் நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் உரிய முறையில் இடம்பெறவில்லை எனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை குறிப்பிட்டுள்ளது.
எனவே, மறு அறிவித்தல் வரை ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தநிலையில், இது சர்வதேச கிரிக்கெட் பேரவையின் திடீர் முடிவாக இருந்தாலும் ஸ்ரீ லங்கா கிரிக்கட்டின் கோரிக்கைக்கு அமையவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிரிக் இன்போ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
-
</ul >