வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 95 குற்றவாளிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள இலங்கையைச் சேர்ந்த 95 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினர்களைக் கைது செய்வதற்காகச் சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவித்தல் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வூட்லர் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு சிவப்பு அறிவித்தல் மூலம் 10 சந்தேக நபர்கள் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் 2025 ஆம் ஆண்டு 11 சந்தேக நபர்கள் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்தார்.

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், நாடு கடத்தல் சட்டத்தின் கீழ் 21 சந்தேக நபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் தங்கியிருந்து இணையவழி மூலமாகப் பாரிய நிதி மோசடிகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் இதுவரை மொத்தம் 95 பேருக்கு எதிராகச் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்தச் சிவப்பு அறிவித்தல் நடவடிக்கைகளின் மூலம் இன்று இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட மூன்று சந்தேக நபர்கள் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.