வெறுப்பை ஏற்படுத்திய காதலியின் சிகை அலங்காரம்: கொடூரமாக கொலை செய்த காதலன்

அமெரிக்காவின் பென்சில்வேனியா மகாணத்தில் தனது காதலியின் சிகை அலங்காரம் வெறுப்பை ஏற்படுத்தியதாக தெரிவித்து காதலன் காதலியை கொலைசெய்துள்ளார்.

பென்சில்வேனியா மகாணத்தைச் சேர்ந்தவர் பெஞ்சமின் கார்சியா (வயது – 49) தனது காதலி கார்மென் மார்டினெஸ் சில்வாவுடன் (வயது – 50) ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கார்மென் மார்டினஸ் தனக்கு பிடித்தது போன்று புதிதாக சிகை அலங்காரம் செய்துள்ளார். அவரின் புதிய சிகை அலங்காரம் (ஹேர் ஸ்டைல்) காதலன் பெஞ்சமினை ஈர்ப்பதற்குப் பதில் வெறுப்பேற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், கோபம் கொண்ட கார்மென், அருகில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதேவேளை தனது தாயாரை கொலை செய்து விடுவேன் என்று, பெஞ்சமின் மிரட்டியதாக அவரின் மகள் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதும் காதலனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சிய கார்மென், அவரது சகோதரர் வீட்டில் தங்கியதுடன் இனிமேல் தன்னை பெஞ்சமின் தேடி வர வேண்டாம் என்று நண்பர் ஒருவர் மூலம் அவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டு கோபமடைந்த காதலன் பெஞ்சமின், கார்மெனின் சகோதரர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு, தனது சகோதரி வரவில்லை என்று கார்மெனின் சகோதரர் கூறியுள்ளார். இதையடுத்து அங்கிருந்து சென்ற பெஞ்சமின், சிறிது நேரத்திற்கு பின் மீண்டும் அங்கு சென்றுள்ளார்.அப்போது, கதவை திறந்த கார்மெனின் சகோதரரை, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெஞ்சமின் குத்தியுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு, உள்ளே இருந்த கார்மென் வந்துள்ளார். அங்கு காதலியை கண்டதும் ஆத்திரத்தில், அவரில் உடலில் பல்வேறு இடங்களில் கத்தியால் பெஞ்சமின் ஆக்ரோஷமாக குத்தியுள்ளார்.

தடுக்க வந்த அவரின் சகோதரர் உட்பட இருவரையும் அவர் கத்தியால் குத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், படுகாயமடைந்த கார்மென் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், ரத்தக் கறை படிந்த கத்தியுடன் இருந்த பெஞ்சமினை கைது செய்துள்ளனர்.