வெனிசுலா ஜனாதிபதி இன்று நீதிமன்றில் ஆஜராகிறார்

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும் இன்று (05) அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தலைநகர் கராகஸில் 03 ஆம் திகதி சிறப்பு இராணுவ நடவடிக்கையில் அமெரிக்க இராணுவம் அவர்களை கைது செய்தது.

போதைப்பொருள் பயங்கரவாத சதி மற்றும் கொகெய்ன் இறக்குமதி செய்தல் உள்ளிட்ட கடுமையான கூட்டாட்சி குற்றவியல் குற்றச்சாட்டுகளில் மதுரோ விசாரிக்கப்பட உள்ளார்.

அதன்படி, தொடர்புடைய வழக்கு இன்று பிற்பகல் மன்ஹாட்டனில் உள்ள கூட்டாட்சி நீதிமன்றத்தில் தொடங்க உள்ளது.

விசாரணை அமெரிக்க மாவட்ட நீதிபதி ஆல்வின் கே. ஹெல்லர்ஸ்டீன் தலைமையில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மதுரோவும் பிற வெனிசுலா தலைவர்களும் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அமெரிக்காவிற்குள் கொகெய்ன் இறக்குமதியை எளிதாக்க தங்கள் அரசாங்க பதவிகளைப் பயன்படுத்தியதாக நாட்டின் நீதித்துறை குற்றம் சாட்டுகிறது.

2020 ஆம் ஆண்டில் நிக்கோலஸ் மதுரோ மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன, அதை அவர் அப்போது மறுத்தமை குறிப்பிடத்தக்கது.