வீட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடியவருக்கு விளக்கமறியல்!

-நுவரெலியா நிருபர்-

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமர்செட் பகுதியில் 810,000 ரூபாய் பெறுமதியான தங்க நகைகளையும் பணத்தையும் திருடிய சந்தேக நபரை 2025 நவம்பர் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிவான் நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

கடந்த 16 ஆம் திகதி வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்த வேளையில், வீடு புகுந்து இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றது.

இது தொடர்பாக, 23 ஆம் திகதி நானுஓயா குற்றத்தடுப்புப் பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

நானுஓயா தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரியான முதன்மை பொலிஸ் பரிசோதகர் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

நுவரெலியா தடயவியல் பொலிஸாரின் உதவியுடன், நானுஓயா, சமர்செட் தோட்டத்தைச் சேர்ந்த 29 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மேற்கொண்ட விசாரணையில், அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகள், பணம் மற்றும் தன்னியக்க பணப்பரிமாற்ற அட்டை (ATM கார்டு) கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர், திருடப்பட்ட தன்னியக்க பணப்பரிமாற்ற அட்டையைப் பயன்படுத்தி 50,000 ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், நானுஓயா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகளின் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.