விசேட தேவையுடையவர்களுக்கான தொழிற்சந்தை!

 

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மாவட்டத்திலுள்ள விசேட தேவையுடையவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்வானது மாவட்ட செயலகத்தின் மனிதவலு வேலைவாய்ப்புப் பிரிவின் ஏற்பாட்டில் அண்மையில்  மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மனிதர்களாகிய எம் அனைவரிடத்திலும் கண்ணுக்குப் புலப்படக்கூடிய, புலப்படக்கூடாத பலவீனங்கள் காணப்படலாம், அவற்றை ஒரு குறையாக கருதாமல் நல்லதொரு சந்தர்ப்பமாக நினைத்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும், ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொரு திறமைகள் காணப்படுகின்றது. தங்களுடைய அந்த திறமைகளை சரியான முறையில் பயன்படுத்தி தங்களுடைய வாழ்வை பலப்படுத்திக் கொள்ள இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போது மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விசேட தேவையுடையவர்களுடைய திறன்களை இனங்கண்டு அவர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கி சமூகத்தில் நல்லதொரு நிலைக்கு அவர்களை கொண்டு வருவதே இவ்வேலைத்திட்டத்தின் மூல நோக்கமாக காணப்படுகின்றது. இதில் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த 11 பிரதேச செயலகத்தைச் சேர்ந்த விசேட தேவையுடையவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில் நேர்முகப் பரீட்சைகள் நடைபெற்று அவர்களை தெரிவு செய்கின்ற செயற்பாடும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மனிதவலு வேலை வாய்ப்பு திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் ஜெசினா பஹ்மி, சமூக சேவைகள் திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் த.பிரணவன்,  மனிதவலு வேலை வாய்ப்பு திணைக்கள பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,  விசேட தேவையுடையவர்கள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்