வற்றாப்பளையில் வீதிகள் சீரின்மை – பாதிப்பை எதிர்கொள்ளும் பொதுமக்கள்

-மன்னார் நிருபர்-

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வற்றாப்பளை தெற்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள உள்ளக வீதிகள் மிகக் கடுமையாகப் பாதிப்படைந்த நிலையில் காணப்படுவதால் அவ்வீதிகளைப் பயன்படுத்தும் மக்கள் பலத்த போக்குவரத்து நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.

இந்நிலையில் அப்பகுதி மக்களின் அழைப்பையேற்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று ஞாயிற்றுக்கிழமை குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

குறிப்பாக வற்றாப்பளை தெற்கு கிராம அலுவலர் பிரிவில் பள்ள வெளி 01ஆம் குறுக்கு வீதி, 04ஆம் குறுக்குக்குவீதி, 05ஆம்குறுக்குவீதி மிக மோசமாகப் பாதிப்படைந்துள்ளன.

ஆகவே இவ் வீதிகளைப் பயன்படுத்தும் மக்கள் எதிர்நோக்கும் இடர் பாடுகளைக் கருத்திற்கொண்டு குறித்த விதிகள் சீரமைத்து தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் மக்களால் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் மக்கள் எதிர்நோக்கும் சிக்கல் நிலைமைகள் தொடர்பாக நேரடியாக பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், கோரிக்கைகளை எழுத்து மூலமாக கையளிக்குமாறு தெரிவித்ததுடன், குறித்த வீதிகளின் சீரமைப்புத் தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.