வடக்கு ஜேர்மனியில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான பிரம்மாண்ட புதையல் கண்டு பிடிப்பு!

வடக்கு ஜேர்மனியில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான, ரோமானிய காலத்து அரிய வெள்ளி நாணயங்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் அடங்கிய பிரம்மாண்ட புதையல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லோயர் சாக்சனி (Lower Saxony) மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய புதையலாக இது கருதப்படுகிறது.

இந்தப் புதையல் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே ஹில்டெஷெய்ம் (Hildesheim) மாவட்டத்தில் உள்ள போர்ஸம் என்ற இடத்தில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு தனியார் உலோக கண்டறிவிப்பாளர் (Metal Detectorist) இதனைத் தற்செயலாகக் கண்டெடுத்துள்ளார்.

இருப்பினும், சட்டவிரோதமாக இதனை சுமார் 8 ஆண்டுகளாக அரசாங்கத்திற்குத் தெரிவிக்காமல் ரகசியமாக மறைத்து வைத்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 2025-இல், லோயர் சாக்சனி மாநில நினைவுச் சின்னங்கள் பாதுகாப்பு அலுவலக (NLD) அதிகாரிகளுக்கு இது குறித்த ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணையின் மூலமே இந்த அரிய புதையல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ தகவலை NLD அண்மையில் வெளியிட்டுள்ளது.

மீட்கப்பட்ட புதையலில் ரோமானியப் பேரரசு காலத்தைச் சேர்ந்த மிகவும் அரிய பொருட்கள் காணப்பட்டன.

அவையாவன,

450 வெள்ளி நாணயங்கள்: பழங்கால ரோமானியப் பேரரசு காலத்தைச் சேர்ந்தவை.

வெள்ளிக் கட்டிகள்: வர்த்தகத்திற்குப் பயன்படுத்தப்பட்ட அரிய உலோகங்கள்.

தங்க ஆபரணங்கள்: நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒரு தங்க மோதிரம் மற்றும் ஒரு தங்க நாணயம்.

இந்தக் கண்டுபிடிப்பு ஜேர்மனியின் வரலாற்று ஆய்வில் மிக முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. மேலும், சட்டவிரோதமாகப் புதையல்களைப் பதுக்குவது தண்டனைக்குரிய குற்றம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.