வடக்கில் தாதியர் போராட்டம்
வடமாகாணத்தில் நாளை 24 மணிநேர பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுக்க அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்படல் பதிவுக்காக ஏனைய ஊழியர்களுடன் சேர்த்து ஒரே கையொப்பப் பதிவு புத்தகம் பயன்படுத்த வேண்டும் என்ற வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முடிவுக்கு எதிராகவே, குறித்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி, நாளை புதன்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பித்து, நாளை மறுதினம் காலை 7 மணிக்கு பணிப்புறக்கணிப்பு நிறைவடையவுள்ளது.
இது தொடர்பில் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், வடக்கு மாகாணத்தைத் தவிர ஏனைய மாகாண சபைகளிலோ அல்லது மத்திய அரசாங்கத்தின் மருத்துவமனைகளிலோ சுகாதார நிறுவனங்களிலோ இத்தகைய நடைமுறை அமுலில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.
வடமாகாணத்தில் மாத்திரம் இது தன்னிச்சையாக அமுல்படுத்தப்படுவது பாரதூரமான பிரச்சினையாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
