வடக்கில் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன!

வெறுமனே உரிமை பிரச்சனையோ, அரசியல் பிரச்சனையோ அல்ல எங்களது பிரச்சனைகள், இந்த சமூகத்திலே புரையோடிப்போயிருக்கின்ற பல்வேறு உளநல பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய தேவையும் அவசரமும் காணப்படுகின்றது என்று வடமாகாண ஆளுனர் பி. எஸ். எம். சாள்ஸ், நேற்று புதன்கிழமை வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவிலே பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.

இது தொடர்பில் வடமாகாண ஆளுனர் தெரிவிக்கையில், “வடக்கில் 194 பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையினால் மூடப்பட்டள்ளது. கிராமப்புறங்களில் இருந்து நகரங்களை நோக்கி மாணவர்கள் நகரத் தொடங்கியிருக்கின்றமையும், பிறப்பு வீதம் குறைந்து செல்வதுமே இதற்கான காரணம்.

இதே காரணத்தை கிழக்கிலே மட்டக்களப்பில் 7 வருடங்கள் அரச அதிபராக கடைமையாற்றும் போதும் கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளை மூடிக்கொண்டிருந்தோம்.

மேலும் இதற்கும் காரணமாக பிறப்பு வீதம் குறைவடைந்து வருகின்றமை மற்றும் 1ஆம் வகுப்பிலே மாணவர்களை அனுமதிப்பதில் சில பாடசாலைகளில் பூச்சிய மட்டத்தில் காணப்படுவதாகவும் எனக்கு தெரிவிக்கப்பட்டது.

எனவே இந்த விடயங்கள் புலம்பெயர்ந்த சமூகத்தினாலும் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமூகத்தினாலும் கணக்கில் எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் என நான் கருதுகின்றேன்.

நாங்கள் வாழவைக்க வேண்டும் என எண்ணுகின்ற எங்களது சமூகம், நாங்கள் வளமாக இருக்க வேண்டும் என நினைக்கின்ற மக்கள், இந்த பிரதேசம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்வீர்கள் என நான் நினைக்கிறேன்.

சில புள்ளி விபரங்களின் படி இச்சமூகத்திலே சில விடயங்கள் அதிகரித்து காணப்படுகிறது.

குறிப்பாக விவாகரத்து அதிகரித்து காணப்படுதல், குழந்தை பேறு குறைவடைந்துள்ளமை, வயது சென்ற திருமணங்கள் அதிகரித்து காணப்படுதல் மற்றும் குடிபோதை, போதைவஸ்து, தற்கொலை போன்ற பல்வேறு சமூக பிரச்சனைகள் இருக்கின்றன.

எனவே இவற்றை எல்லாம் கடந்து இச் சமூகம் வாழ வேண்டும் என்றால் இந்த சமூகத்துக்கு
புலம்பெயர்ந்த சமூகம் ஆற்ற வேண்டிய பணி நிறைய இருக்கின்றது ” என்றார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்