
ரீ பில்டிங் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்
நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை வழிநடத்துவதற்காக செயற்படுத்தப்பட்டு வரும் ரீ பில்டிங் ஸ்ரீ லங்கா ‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாக லோட்டஸ் அரங்கில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற உள்ளது.
உயிரிழப்புகள், தனியார் மற்றும் அரச சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் உட்பட டிட்வா புயல் அனர்த்தத்திற்குப் பின்னரான புனர்வாழ்வு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக உயர் மட்ட, நன்கு ஒருங்கிணைந்த தேசிய மீட்பு பொறிமுறையின் விரைவான மற்றும் அவசரத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டம் செயற்படுத்தப்படுகிறது.
நாட்டின் மீள்கட்டமைப்புத் திட்டத்திற்கு தற்போது மூன்று மூலோபாய அணுகுமுறைகளின் கீழ் நிதியளிக்கப்படுகிறது.
இதன்போது, முக்கியத்துவத்தின் அடிப்படையில் மீள் ஒழுங்கமைப்பு செய்முறையின் கீழ் தற்போது செயற்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களின் நோக்கங்களை மாற்றி செயற்படுத்தல், மீள் ஒதுக்கீட்டின் (Re-allocating) கீழ் நிதி முகாமைத்துவச் சட்டத்தின் விதிகளின் அடிப்படையில் வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமான தொகையை ஒதுக்குதல் என்பன மேற்கொள்ளப்படுகின்றன.
இதன்படி, 2026 ஆம் ஆண்டிற்காக 500 பில்லியன் ரூபா குறைநிரப்புப் பிரேரணை முன்வைப்பு மற்றும் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்தின் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு, அரச மற்றும் தனியார் நன்கொடையாளர்களின் ஆதரவு பெறப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
