ராஜிதவின் மறுசீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் பிணையில் விடுவிக்கக் கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டதை வலுவிழக்கச் செய்யக் கோரி, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு ஒன்றை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்திருந்த நிலையில் மனுவை விசாரிக்க மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.
மனுவில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்ட இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தை ஒகஸ்ட் 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த மனு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்திரிகா காலிங்கவங்ச முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ராஜித சேனாரத்ன சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன, தனது கட்சிக்காரர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் முன்பிணை கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்ததாகவும், இருப்பினும் மனு நீதவானால் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
நீதவான், பிணை மனுவை நிராகரித்ததற்கான காரணங்களைத் தெளிவாக முன்வைக்கவில்லை என சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார் .
இதனால், நீதவானின் உத்தரவு பிணைச் சட்டத்தின் விதிகளுக்கு முரணானது எனவும், அதை திருத்தி தனது கட்சிக்காரரை பிணையில் விடுவிக்க உத்தரவிடுமாறு நீதிமன்றத்தைக் கோரினார்.
இந்த மனு தொடர்பான விசாரணைகள் முடியும் வரை, தனது கட்சிக்காரரை கைது செய்வதைத் தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன கோரிக்கை விடுத்துள்ளார் .
முன்வைக்கப்பட்ட வாதங்களை ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை அனுப்புவதற்கு மாத்திரம் உத்தரவிட்டார்.
மனு ஒகஸ்ட் 7 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது .