
யாழ். தேவி ரயிலுடன் மோதியதில் ஒருவர் பலி!
கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் முகமாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் ரயில் கடவையைக் கடக்க முற்பட்டவேளை, காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ‘யாழ். தேவி’ ரயிலுடன் மோதியதில் இவ்விபத்து நேர்ந்துள்ளது.
விபத்து இடம்பெற்ற வேளையில் ரயில் கடவைக் காப்பாளர் அப்பகுதியில் இருக்கவில்லை எனவும், குறித்த பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் ஏற்கனவே இரண்டு தடவைகள் இடம்பெற்றுள்ளதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
விபத்தில் ஆனைப்பந்தி – யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த இரத்தினராசா கிருஷ்ணமோகன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
