யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் நடத்துகின்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினர் இன்று செவ்வாய்க்கிழமை அடையாள எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள்.
யாழ்ப்பாணத்தில் பணியாற்றுகின்ற சட்டத்தரணி சம்பந்தமாக எந்தவொரு நீதிமன்ற கட்டளைகளும் இல்லாமல், அவருடைய அலுவலகத்தில் அத்துமீறி பிரவேசித்து, அலுவலகத்தை சோதனை நடத்தியதற்கு எதிராகவும், உரிய நீதிமுறையான நடவடிக்கைகள் பின்பற்றப்படாமல் பொலிஸார் மேற்கொள்ளுகின்ற அராஜகத்திற்கு எதிராகவும் நீதி முறைகள் ஒழுங்காக பின்பற்றப்பட வேண்டும் என்கின்ற நீதியை நோக்கிய நகர்வாக இன்றைய தினம் திருகோணமலை சட்டத்தரணிகள் கவனயீர்ப்பில் ஈடுபட்டதாக, சட்டத்தரணி துஷ்யந்தன் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிசார் யாழ். மல்லாகத்தைச் சேர்ந்த பெண் சட்டத்தரணி ஒருவரின் அலுவலகத்திற்குச் சென்று ஆவணங்கள் பரிசீலித்திருந்ததாகவும், பின்னர் காணி உறுதி மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் குறித்த சட்டத்தரணி கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதவான் நீதிமன்றில் திங்கட்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்போது 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையிலேயே குறித்த அடையாள எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.






