யாரையும் பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கில்லை: பிரதமர் அதிரடி

அரசாங்கம் அந்தஸ்தின் அடிப்படையில் யாரையும் பாதுகாக்க முற்படவில்லை என்பதும், அது தற்போதைய நீதித்துறை நடவடிக்கைகளின் மூலம் தெளிவாகத் தெரிகிறது என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

2024 ஜனாதிபதித் தேர்தலின் போது ‘வளமான தேசம், அழகான வாழ்க்கை’ என்ற கொள்கைப் பிரகடனத்தின் கீழ் உறுதியளித்தபடி, சுயாதீனமான நீதித்துறை மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் முன்னதாகத் வாபஸ் பெறப்பட்ட வழக்குகளை மீண்டும் பரிசீலித்து, தகுதியான வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

2019 முதல் 2024 வரையான காலப்பகுதியில் மொத்தம் 102 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.

இதில் 65 வழக்குகள் மீண்டும் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 34 வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்ய வேண்டாம் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

3 வழக்குகள் தொடர்பில் மேலதிக பரிசீலனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தற்போது நாடாளுமன்றத்தில் உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்கள் என அனைவருக்கும் எதிராகச் சட்ட நடவடிக்கைகள் பாய்கின்றன.

சில சந்தர்ப்பங்களில் 15 முதல் 20 ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவங்கள் கூட மீண்டும் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

“முன்னைய அரசாங்கங்களில் ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் கொண்டவர்கள், தற்போது நீதித்துறை சரியாக இயங்கும் போது ‘யாரையாவது பாதுகாக்கிறோமா?’ என்று கேள்வி எழுப்புவது வேடிக்கையானது,” எனப் பிரதமர் சாடினார்.

சாட்சியங்களின் அடிப்படையிலேயே அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாகவும், எக்காரணம் கொண்டும் எவரையும் அரசாங்கம் பாதுகாக்காது என்றும் அவர் உறுதியளித்தார்