
மின்னல் தாக்குதலுக்கு இலக்கானவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு
சம்மாந்துறை செனவட்டை பிரதேசத்தில் வயலில் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மின்னல் தாக்குதலில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனவட்டை பிரதேசத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய நேற்று வெள்ளிக்கிழமை மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டிருந்தது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஒரு பிள்ளையின் தந்தையான சம்மாந்துறை செந்நெல் கிராமம் -02 பிரதேசத்தைச் சேர்ந்த முஹமட் முஸ்தபா முஹமட் சியாம் (வயது-27) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த நபர் மற்றுமொரு நபருடன் வேலையின் நிமித்தம் வயலுக்கு சென்ற நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. இதன் போது உயிரிழந்தவரின் அருகில் வயல் வேலையில் ஈடுபட்டவர் காயமடைந்த நிலையில் சம்மாந்தறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் – ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்ட பின்னர் குறித்த சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மரண விசாரணையில் மின்னல் தாக்கத்தினால் மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.