மாணவியின் உள்ளாடையை கழட்டச் சொல்வதா: சீமான் ஆவேசம்?
நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் உள்ளாடையை கழட்டுமாறு தெரிவித்த, தேர்வு கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, மயிலாப்பூர் ‘நீட்’ தேர்வு மையத்தில் தேர்வு எழுதச் சென்ற மாணவியிடம் உள்ளாடையைக் கழட்டுமாறு தேர்வு கண்காணிப்பாளர் கட்டாயப்படுத்தியது வன்மையான கண்டனத்துக்குரியது.
‘நீட்’ என்னும் உயிர்க்கொல்லி தேர்வில், சோதனை என்ற பெயரில் அடிப்படை மனித உரிமைகளைப் பறிப்பது கொடுமையின் உச்சமாகும். மத்தியில் ஆளும் பாஜக அரசால் திணிக்கப்பட்ட கொடும் நீட் தேர்வால் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டுக் கானல் நீராகியது.
தமிழ்நாட்டில் மட்டும் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு காரணமாக தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொண்ட பின்பும், நீட் தேர்வை இரத்து செய்ய மோடி அரசு மறுத்துவருவது கொடுங்கோன்மையாகும்.
நீட் தேர்விற்கு வரும் மாணவர்களை பயங்கரவாதிகளைப் போல சோதனை செய்து, உள்ளாடைகள் வரை அகற்றச்சொல்வது சிறிதும் மனிதத் தன்மையற்ற கொடுஞ்செயலாகும். அதிலும் மற்ற மாநிலத்தில் இல்லாத நடைமுறையாக தமிழகத்தில் மட்டும் இவற்றை எல்லாம் செயல்படுத்துவதற்குப் பின்னால் தமிழ்ப் பிள்ளைகள் மருத்துவராவதைத் தடுக்க, திட்டமிட்டு வேலை செய்வதாகக் கருத வேண்டியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த முதல் சட்டமன்றத் கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வு இரத்து செய்யப்படும் என்று வாக்குறுதியளித்து, மக்களை ஏமாற்றி ஆட்சி அதிகாரத்தை அடைந்த திமுக, ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகியும் நீட் தேர்வை இன்றுவரை இரத்து செய்யவில்லை.
ஆகவே, திமுக அரசால் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்திற்குள் நீட் தேர்வை இரத்து செய்ய முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் நீட் தேர்வின் பெயரால் அடிப்படை மனித உரிமைகள் பறிக்கப்படுவதையாவது தடுத்து நிறுத்த வேண்டும்.
மேலும், மாணவியின் உள்ளாடையைக் கழட்ட கட்டாயப்படுத்திய மயிலாப்பூர் நீட் தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நீட் தேர்வுக்கு எதிரான வழக்கினை விரைவுபடுத்த உரிய சட்டப் போராட்டதை முன்னெடுக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
