மாணவர்களுடன் தவறான உறவு : ஆசிரியைக்கு வாழ்நாள் முழுவதும் கற்பித்தலுக்கு தடை!

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் பாடசாலை மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்ட குற்றத்திற்காக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஆசிரியை ஒருவருக்கு, வாழ்நாள் முழுவதும் கற்பித்தல் பணியில் ஈடுபட அந்நாட்டு கல்வி அமைச்சு தடை விதித்துள்ளது.

மான்செஸ்டர் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் கணித ஆசிரியையாகப் பணியாற்றிய 31 வயதுடைய ரெபெக்கா ஜாய்ன்ஸ் என்பவரே இவ்வாறு வாழ்நாள் தடையை எதிர்கொண்டுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு இவர் தனது வகுப்பில் பயின்ற இரு மாணவர்களுடன் தவறான முறையில் உறவைப் பேணி வந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது.

இது தொடர்பான பொலிஸ் விசாரணைகளின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

குறித்த ஆசிரியை மாணவர்களை வற்புறுத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதோடு, அதில் ஒரு மாணவர் மூலம் அவர் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தமையும் உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாணவர்களைத் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக ஆசிரியை ரெபெக்காவுக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு ஆறரை ஆண்டுகள் (6½) சிறைத் தண்டனை விதித்தது.

தற்போது அவர் சிறையில் இருந்து வரும் நிலையில், ஆசிரியப் பணிக்கான தர்மநெறிகளை மீறியமை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தமை கருதி, அவர் இனி எப்போதும் ஆசிரியராகப் பணியாற்ற முடியாது என அந்நாட்டு கல்வித் துறை தற்போது உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.