மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் 10 வருடங்களுக்கு பின்னர் கைது

பதுளை மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு 10 வருடங்களாக நீதிமன்ற உத்தரவை புறக்கணித்து வந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதன்படி, சந்தேக நபர் பதுளை மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி மஹிந்த லியனகம உத்தரவிட்டார்.

ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு, பதுளை பகுதியில் ஒருவரை தடியால் தாக்கிக் கொன்றதாகக் கூறி பதுளை பொலிஸார் சந்தேகநபருக்கு எதிராக பதுளை மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

விசாரணையின் போது பிரதிவாதி அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றதால், அவர் இல்லாமலேயே வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் வழக்கு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அப்போதைய மேல் நீதிமன்ற நீதிபதி, 27.04.2015 அன்று வழக்கின் தீர்ப்பை அறிவித்ததோடு, சந்தேகநபருக்கு மரண தண்டனை விதித்தார்.

இருப்பினும், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்த நிலையில், சந்கேதநபருக்கு எதிராக நீதிமன்றம் திறந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்தது.

இருப்பினும், சுமார் 10 வருடங்களாக நீதிமன்ற உத்தரவை புறக்கணித்து வந்த அவர் சமீபத்தில் மொனராகலை புத்தம பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

மனைவியைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர், சந்தேகநபர் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, ​​பதுளை மேல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்திருப்பது தெரியவந்தது.

விசாரணையில் அந்த நபர் நீதிமன்றத்தை புறக்கணித்து அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்று புத்தம பகுதியில் குடியேறி, அங்கு இந்தப் பெண்ணை மணந்து கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தது தெரியவந்தது.

சந்தேக நபரை நேற்று சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றத்தில் விரிவான அறிக்கையுடன் ஆஜர்படுத்திய பொலிஸார், பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக பதுளை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

அதன்படி, பதுளை பொலிஸார் சந்தேக நபரை பதுளை மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவரை 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.