மன்னாரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஏற்பாட்டில் திறமை சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

-மன்னார் நிருபர்-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் முயற்சியில், அக்கட்சியின் கல்வி,கலாச்சார பிரிவினரின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில், 9 ஏ சித்திகளை பெற்ற மாணவர்கள் மற்றும் உயர்தர பரீட்சையில் 3 ஏ சித்திகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை மாலை மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினர் என்.எம்.முனவ்பர் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் மன்னார் மற்றும் மடு வலயத்தை சேர்ந்த 108 மாணவர்கள் பணப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப் பட்டனர்.

பணப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் முன்னாள் அமைச்சரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான ரிசார்ட் பதியுதீன் வழங்கி வைத்தார்.

அத்தோடு அந்த மாணவர்களின் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் கைகளினால் பொன்னாடை போர்த்தப்பட்டு கௌரவிக்கப் பட்டமை சிறப்பம்சமாக குறித்த நிகழ்வில் அமைந்திருந்தது.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய எம். பி ரிஷாட் பதியுதீன்,”மாணவர்களாகிய நீங்கள் அர்ப்பணிப்போடு கல்வி கற்றதனால் தான் இன்று இவ்வாறு கௌரவிக்கப் படுகிறீர்கள். உங்களுடைய இந்த செயற்பாட்டினால் உங்கள் பெற்றோர்கள், நீங்கள் கற்ற பாடசாலையின் அதிபர்கள் ஆசிரியர்கள் எல்லோரும் கௌரவிக்கப் படுவார்கள். ஒரு பட்டதாரி ஆக ஆவது மட்டும் தான் எங்களுடைய இலக்கு என்ற நிலை இல்லாமல் எந்த அளவு உச்சத்தை அடைய முடியுமோ அந்த இலக்கை நோக்கி தொடர்ந்து முயற்சி செய்கிறவர்களாக இருக்க வேண்டும்.

குறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து முஹம்மது, மன்னார் நகர சபை தவிசாளர் மற்றும் உபதவிசாளர், மன்னார் பிரதேச சபை தவிசாளர் மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர், பிரதி கல்வி பணிப்பாளர்.மன்னார் மடு வலய பாடசாலைகளின் அதிபர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.