மன்னாரில் 3 வருடங்களுக்கு முன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட கிராம சேவகர் : இறுதியில் வழங்கப்பட்ட தீர்ப்பு!
-மன்னார் நிருபர்-
மன்னார் தலைமன்னார் பகுதியில் fle;j 2022 ஆம் ஆண்டு ஆவணி மாதம் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு பதவியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட தலைமன்னார் கிராமம் தெற்கில் பணிபுரிந்த கிராம சேவகரின் வழக்கானது கொழும்பு மேல் நீதி மன்றத்தினால் விசாரணை செய்யப்பட்ட நிலையில் கடந்த 23 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதற்கு அமைய குறித்த கிராம சேவகர் சார்பில் வழக்கின் ஆரம்பத்திலிருந்து முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி காளிங்க இந்திரதிஸ்ஸ மற்றும் அவருடன் இணைந்த சட்டத்தரணி வசிம் அக்ரம் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
அதற்கமைய முதலாவது சாட்சியை விசாரணை செய்த நீதிமன்றமானது தனது முதலாவது சாட்சிகளின் குறுக்கு விசாரணை நிறைவில் குறித்த லஞ்ச ஒழிப்பு ஆணைக் குழுவினால் தொடரப்பட்ட வழக்கை முன் கொண்டு செல்ல முடியாது என கண்டறிந்ததை அடுத்து குறித்த கிராமசேவகருக்கு எதிராக கொடுத்த குற்றத்திலிருந்து விடுதலை செய்து வழக்கை தள்ளுபடியும் செய்தது.
ஆதாரங்கள் எதுவும் இன்றி வெறுமனே பொய் குற்றச்சாட்டின் பெயரில் ஒரு நேர்மையான கிராம சேவகர் கைது செய்யப்பட்டு சுமார் மூன்று வருடங்களுக்கு மேலாக சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டு வைக்கப்பட்டு வழக்கை முன் கொண்டு செல்ல முடியாத நிலையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கை கை வாங்கியமை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கிராம சேவகரை மீண்டும் சேவையில் இணைப்பதற்கும் அவருடைய 3 வருடத்திற்கு மேற்பட்ட சம்பளங்களை வழங்கவும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.