மட்டு.வாழைச்சேனையில் தொல்பொருள் பெயர்பலகை அகற்றப்பட்ட சம்பவம் : தவிசாளர் உள்ளிட்டோருக்கு பிணை!

 

மட்டக்களப்பில் தொல்பொருள் பெயர் பலகைகள் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேருக்கு வாழைச்சேனை   நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை பிணை வழங்கியுள்ளது.

மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்தி நாட்டப்பட்ட பெயர் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் பிரதி தவிசாளர் மற்றும் திகிவெட்டையை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் உட்பட நால்வர் சட்டத்தரணி ஊடாக வாழைச்சேனை நீதிமன்றில் சரணடைந்தனர்

இன்று சரணடைந்த நால்வர் மற்றும் நேற்று கைது செய்யப்பட்ட சந்தேகநபர் உள்ளிட்ட 5 பேருக்கும் வாழைச்சேனை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

5 லட்சம் பெறுமதியான ஒரு சரீரப்பிணையில்  ஐவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் தொல்பொருள் திணைக்களத்தினால்,  பெயர் பலகை நடுவதற்கான  அனுமதி  வாழைச்சேனை பிரதேச சபையில் பெறப்பட்டு, எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதிக்கு முன் அகற்றப்பட்ட பெயர் பலகைகள் நடப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் 5 பேருக்கும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் 15 விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.