மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வாண்டின் ஆனி மாதத்திற்கான அபிவிருத்தி குழு கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜாவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான செந்தில் தொண்டமான் பங்கேற்புடன் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
குறிப்பாக இம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களுக்கான அனுமதியினை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், இம்மாவட்டத்தின் விவசாயம், நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம் (டெங்கு ஒழிப்பு), சுற்றாடல், மீன்பிடி உட்பட்ட அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டதுடன், அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநர் உடன் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளை பணித்துள்ளார்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரியன் கம்பனி மூலம் அமையவுள்ள சோளர் மின் உற்பத்தி திட்டத்தினை செயற்படுத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டதுடன் இமேலும் ஆயிரம் ஏக்கர் காணி சோளர் மின் உற்பத்தி செய்வதற்காக நிலமும் ஒதுக்கப்பட்டது.
மாவட்டத்தின் மைலத்தமடு மாதவனை மேய்ச்சற் தரை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் அங்கு சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களை அங்கிருந்து அகற்றுவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன் மகாவலி தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநரின் பணிக்குழுவினர் உள்ளிட்ட உயரதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, உள்ளுராட்சி மன்றங்களின் ஆணையாளர், செயலாளர்கள், மாவட்ட பொலிஸ் உயரதிகாரி, பாதுகாப்பு படைகளின் உயரதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள், ஏனைய திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட திணைக்களங்கள் சார் உயரதிகாரிகள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்