மட்டக்களப்பு சிறைச்சாலை கைதி ஒருவர் நீதிமன்றுக்கு அழைத்து சென்ற வேளை தப்பியோட்டம்!
-சம்மாந்துறை நிருபர்-
மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து, சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றிற்காக அழைத்து வரப்பட்ட கைதி, இன்று வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் தப்பியோடியுள்ளார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை உடங்கா 02 பகுதியைச் சேர்ந்த, ரிசாட் முகம்மட் சாதிக் சுமார் (வயது 28) என்பவரே, இவ்வாறு தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி கைதி, கடந்த டிசம்பர் 7 ஆம் திகதி, ஹெரோயின் போதைப் பொருளுடன் சம்மாந்துறை விசேட அதிரடிப் படையினரினால், கைது செய்யப்பட்டு, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தப்பி சென்ற கைதியை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை, சம்மாந்துறை பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.