
மட்டக்களப்பு இளைஞன் ரினோசன் மரணத்தில் சந்தேகம்
சிறைச்சாலையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியாசாலைக்கு சிகிச்சைக்கு கொண்டுசென்ற இளைஞன் ரினோசனின் மரணம் தொடர்பில் நீதிமன்றில் சந்தேகம் தெரிவித்துள்ளதாக சட்டத்தரணி ஜெயரட்னராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு பொலிஸாரினால் கடந்த மாதம் 02ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இளைஞன் ஒருவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட நிலையில் அங்கு சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் 07ஆம் திகதி வைத்தியசாலையில் உயிரிழந்திருந்தார்.
இந்த நிலையில் குறித்த இளைஞன் பொலிஸாரின் தாக்குதல் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக மரணமான இளைஞரின் குடும்பத்தினரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவந்தன.
இது தொடர்பில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உயிரிழந்த இளைஞனின் குடும்பம் சார்பில் கொழும்பிலிருந்து வந்த சட்டத்தரணிகளான ஜெயரெட்ணராஜா, சேனக பெரேரா ஆகியோர் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
பதில் நீதிவானால் இன்றைய தினம் வழக்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதன் காரணமாக இன்றைய தினம் பெற்றோரின் சந்தேகம் தொடர்பில் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்த நிலையில் பதில் நீதவானாக கடமையாற்றுவதன் காரணமாக பிரிதொரு நாளில் இதனை பதிவுசெய்யுமாறு நீதவான் தெரிவித்ததாக சட்டத்தரணி ஜெயரெட்ணராஜா தெரிவித்தார்.
இதேபோன்று கண்டிக்கு அனுப்பப்பட்டுள்ள உடற்கூற்று பரிசோதனை அறிக்கை தாமதம் ஆகுவதன் காரணமாகவும் வழக்கானது எதிர்வரும் மாசிமாதம் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
