மட்டக்களப்பில் போலி 5000 ரூபா தாளை வியாபாரியிடம் கொடுத்து மோசடி!

மட்டக்களப்பில் மரக்கறி வாங்கிவிட்டு போலி 5000 ரூபா தாளை மரக்கறி வியாபாரியிடம் கொடுத்து விட்டு நபரொருவர் தப்பி சென்றுள்ளார்.

மட்டக்களப்பு பார் வீதியில் இன்று சனிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீதியின் ஓரத்தில் பட்டாரக வாகனத்தில் மரக்கறிகள் கொண்டு வந்து வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரியே இவ்வாறு மோசடிக்கு ஆளாகியுள்ளார்.

“இன்று காலை ஒருவர் வந்து என்னிடம் மரக்கறி வாங்கினார். மரக்கறியை பெற்றுக்கொண்டு 5000 ரூபா தாளை தந்து விட்டு மிகுதி காசை பெற்றுக்கொண்டு சென்று விட்டார். மரக்கறி வாங்க மக்கள் நிறைய பேர் குவிந்து நின்றதால் நான் அந்த நாணயத்தாளை கவனிக்காமல் மற்றைய தாள்களோடு வைத்து விட்டேன். அதன் பின்னர் மற்றுமொரு வாடிக்கையாளருக்கு பணம் கொடுக்க பணத்தை எடுத்த போது 5000 ரூபா நாணயத்தாள் ஒன்று வெறும் பேப்பரில் அச்சிடப்பட்டிருந்த போலி நாணயத்தாள் என்பதை அறிந்தேன் என மிகுந்த கவலையுடன் தெரிவித்துள்ளார்” என பாதிக்கப்பட்ட வியாபாரி தெரிவித்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

மேலும் இது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக குறித்த வியாபாரி தெரிவித்துள்ளார்.

மோசடி செய்யும் நபர்கள் இவ்வாறான போலி நாணயத்தாள்களை வழங்கக்கூடும் ஆகவே அவதானமாக இருக்கும்படி மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்