மட்டக்களப்பில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கி மீட்பு

மட்டக்களப்பு நகரில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ரி-56 ரக துப்பாக்கி ஒன்று மற்றும் ரவைகள் மகசீன் என்பவற்றை நேற்று வெள்ளிக்கிழமை இரவு விசேட அதிரடிப்படையினர் மீட்டு ,மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு லயன்ஸ் கிளப் வீதியில் உள்ள காணி ஒன்றில் புதிதாக வீடு கட்டுமானப்பணி இடம்பெற்று வருகின்ற நிலையில் சம்பவ தினமான வெள்ளிக்கிழமை இரவு அங்கு மலசல கூடத்திற்கு குழி அமைப்பதற்கான நிலத்தை தோண்டும் போது புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் துப்பாக்கி இருப்பதை கண்டு விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் 50 துப்பாக்கி ரவைகள், 2 மகசீன்கள் என்பவற்றை மீட்டனர்.
இச்சம்பவம் தொடர்பில் மட்டு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.