மட்டக்களப்பில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்: அருண் ஹேமச்சந்திரா

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கால அபிவிருத்தி பணிகளின்போது நடைபெற்ற ஊழல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் வெளி விவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் 760 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் 25 மில்லியன் ரூபாய்களாகப் பிரிக்கப்பட்டு எந்தவித ஒப்பந்த விண்ணப்ப கோரல்களும் இல்லாமல் வேலைத்திட்டங்கள் முறைகேடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்களது ஆட்சியில் எந்தவொரு அரசியல் தலையீடும் இருக்காது, அதனையும் மீறி அரசியல் ரீதியாக தங்களது பெயரைக் கூறிக்கொண்டு எவரேனும் பிரவேசிப்பார்களாயின் அது தொடர்பில் தமக்கு உடனே அறியத்தருமாறு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பிரதியமைச்சருமான அருண் ஹேமசந்திரா அரச அதிகாரிகளைக் கோரியுள்ளார்.