மட்டக்களப்பில் டெங்கு பரிசோதனை : 41 இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

சுகாதார அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ள தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று வியாழக்கிழமை காலை திடீர் டெங்கு சோதனை நடத்தப்பட்டது.

அங்கு 401 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 14 இடங்களில் டெங்கு நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்டு, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உதயகுமார் தெரிவித்தார்.

விமானப்படையினர், பொலிஸார், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஊழியர்கள், பொது சுகாதார பரிசோதர்கள், பிராந்திய சுகாதார பணிமனை ஊழியர்கள் இணைந்து இந்த டெங்கு சோதனையை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவுக்குள் அடங்கும் கோட்டைமுனை, புளியந்தீவு ஆகிய பகுதிகளில் இந்த டெங்கு பரிசோதனை நடத்தப்பட்டன.

பத்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் வீடுகள், பாடசாலைகள், மத ஸ்தலங்கள் உட்பட 401 இடங்களில் சோதனையிடப்பட்டன.

இதில் 14 இடங்களில் டெங்கு குடம்பிகள் சுகாதார அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.