மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சினால் புதிய சட்டங்கள்

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் உள்ள சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், 2026 ஆம் ஆண்டிற்குள் பல புதிய சட்டங்களை இயற்றவும், காலாவதியான சட்டங்களைச் சீர்திருத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை உத்தியோகபூர்வமாக அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, இணையவழியில் சிறுவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் குற்றங்களை (Cyber Crimes) தடுப்பதற்கும், அவற்றை முறையாகக் கையாள்வதற்கும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் பிரகடனத்திற்கு (UNCRC) இணங்க, புதிய ‘சிறுவர் உரிமைகள் சட்டம்’ உருவாக்கப்படவுள்ளது.

மேலும், தற்போது நடைமுறையிலுள்ள 2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க வீட்டு வன்முறை தடுப்புச் சட்டத்தை இரத்து செய்து, அதற்குப் பதிலாக காலத்திற்கேற்ற புதிய சட்டமொன்று கொண்டுவரப்படவுள்ளது.

அவ்வாறே, சிறுவர்களை வளர்ப்புப் பெற்றோரிடம் ஒப்படைப்பது மற்றும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பான புதிய சட்டங்கள் வகுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏற்கனவே நடைமுறையிலுள்ள சில சட்டங்களில் முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

1939 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கட்டளைச் சட்டம், 1941 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க பிள்ளைகளைத் தத்தெடுத்தல் கட்டளைச் சட்டம்,
1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டம் ஆகிய சட்டங்கள் திருத்தப்படவுள்ளன